திரைக்கதை - அறிமுகம்

திரைக்கதை என்னும் கலை – அறிமுகம் 
                                     
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -





தமிழனுக்கும் சினிமாவிற்கும் உள்ள உறவு என்பது கழுதைக்கும், அழுக்கு மூட்டைக்கும் உள்ள நெருங்கிய உறவைப் போன்றது!.

உலக நாடுகளை பொறுத்தவரை சினிமா என்பது குதிரையாக பாவிக்கப் பட்டாலும், இங்கு அது கழுதையாகவே வளர்க்கப்படுகிறது. நாம் ரசிக்கும் அழுக்கு மூட்டைகளை அது, தினந்தோறும் சுமந்து கொண்டுதான் இருக்கிறது. சில நேரங்களில் அழுக்கு மூட்டைகள் இறக்கி வைக்கப்பட்டு கழுதை அலங்கரிக்கப்படுவதும் நடைபெறுகிறது.

என்னதான் கழுதை அலங்கரிக்கப்பட்டாலும் அது ஒரு போதும் குதிரையாக மாறப்போவது இல்லை. அழுக்கு மூட்டைகளை இறக்கி வைப்பதையோ, இல்லை கழுதையை அலங்கரிப்பதையோ மாறி மாறி செய்வதை தவிர்த்துவிட்டு நாம் பயணிக்க ஒரு குதிரையை தேர்வு செய்தால் நன்றாக இருக்கும்.

1895ல் பாரீசில் கலை வடிவமாக பிறந்த சினிமா இன்றளவும் உலகம் முழுவதும் கலையாகவே வளர்க்கப்படுகிறது. உண்மையில் நமக்கு சினிமா கலையாகவா அறிமுகப்படுத்தப்பட்டது….?

1931ல் தமிழ் சினிமா என்னும் மழலை பேசுவதை கேட்க அனைவரும் ஆவலாக இருக்க அது நேராக பாடத்துவங்கியது. உலக சினிமா பேசிக்கொண்டு இருந்த காலகட்டத்தில் நாமோ பாடிக்கொண்டிருந்தோம். ஸ்லாப்ஸ்டிக் காமடியின் தாக்குதலுக்கு பிறகு காட்சி ரீதியாக மாறிய சினிமா, இங்கு பேச்சு பேச்சு என பேசித்தள்ளியது சில கலைஞர்களின் வருகையால்.

அதிசய பொழுது போக்காக அறிமுகமாகி, இசைக்கச்சேரி நடத்தி பிறகு பிரச்சாரக்கருவியாக மாறி, கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் வேலை பார்த்து, தனிமனித துதி பாடல் பாடி மொத்தத்தில் ஒரு கோமாளியாகிப்போன சினிமா, ஒரு கலையாகவோ அல்லது தொழில்நுட்பமாகவோ இன்றளவும் இங்கு ஏற்றுக்கொள்ளப்பட வில்லை என்பதே உண்மை.

சினிமாவை இளம் வயதில் காதலிப்பதும், வயதான பிறகு புறக்கணிப்பதும் நம்மில் பலர், வாழ்வில் தவறாமல் செய்யும் செயல். தன் முதிர்ச்சியை, தான் இளைஞன் தான் என்று நம்பும் காலத்தில், நடைமுறையில் இருக்கும் நாகரீக பாணீயை கொண்டு மறைக்க முயற்சித்து அதையே மீதமுள்ள காலகட்டத்தில் தொடர்வது போல், சினிமாவையும் தொடர்கிறோம் என்றே நான் நினைக்கின்றேன். ஆதலால் தான் “அந்த காலத்துல” என்ற வார்த்தை அடிக்கடி மேற்கோள் காட்டப்படுகிறது.

அந்த காலத்தில் மட்டுமல்ல எந்த காலத்திலும் சினிமா ரசிக்கும் படியாக இருப்பதற்கு நல்ல திரைக்கதை இருந்தால் சாத்தியமாகும்.

நல்ல திரைக்கதையை எவ்வாறு உருவாக்குவது? முதலில் நல்ல திரைக்கதை என்பது என்ன? ஒரு திரைக்கதை மட்டும் போதுமா இயக்குநர் தேவையேயில்லையா?, தொழில்நுட்ப கலைஞர்கள் தேவையில்லையா? நடிகர்களை பற்றி என்னதான் உனது நினைப்பு, என்றெல்லாம் நீங்கள் என்னை பார்த்து கேள்வி கேட்டால்!,

இப்படி வைத்துக்கொள்வோம், நல்ல சினிமாவை மேலே குறிப்பிட்டது போல் ஒரு குதிரை என்று எடுத்துக்கொள்வோம் எனில்

குதிரையின் மீது சவாரி செய்ய கண்டிப்பாக (தெரிந்து) இருக்க வேண்டிய மூன்று…
  1. குதிரை ஏற்றம்
  2. நல்ல திடமான உடலமைப்பு
  3. குதிரையின் கடிவாளமும், லகானும்
இதில் குதிரையின் கடிவாளத்தை இயக்கம் என்று எடுத்துக்கொண்டு, நடிகர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களையும், நல்ல திடமான உடலமைப்பு என்று எடுத்துக்கொண்டால், குதிரை ஏற்றத்தினை திரைக்கதையாக கொள்ளலாம்.

நல்ல திடமான உடலமைப்பும், கூடவே குதிரையின் கடிவாளம் நமது கையில் இருந்தாலும், குதிரை ஏற்றம் தெரியாமல் குதிரையில் சவாரி செய்வது என்பது சற்று கொடுமையான அனுபவத்தையே தரும். அதனாலேயே நமக்கு பல படங்களை பார்க்கும் போது குறுக்குத்தெருவில், வேகமாக ஓடும் குதிரையில் சவாரி செய்த உணர்வு ஏற்படுகிறது. அதனால் தானோ என்னவோ நாம் பல நேரங்களில், கழுதையை கட்டிப்பிடித்துக்கொண்டு பயணிக்கிறோம்.

ஒரு நல்ல திரைக்கதையை வைத்து கொண்டு திறமையான இயக்குநர் ஒரு காவியத்தை படைக்கமுடியும். அதே திரைக்கதையை ஒரு மோசமான இயக்குநரால் சாதாரண திரைப்படத்தை தற இயலும். ஒரு மோசமான திரைக்கதையை வைத்து கொண்டு எந்த ஒரு சிறந்த இயக்குநராலும் ஒரு மிகச்சாதாரண படத்தை கூட தற இயலாது!
                                    - அகிரா குரசோவா

அகிரா குரசோவா சொல்வதைப்போல் ஒரு மோசமான திரைக்கதையை வைத்து கொண்டு எந்த ஒரு மேதாவி இயக்குநராலும் ஒரு காவியத்தை படைக்க இயலாது. தேசிய விருது பெரும் திரைப்படங்கள் மக்களால் நிராகரிக்க படுவதும், நல்ல படம் என்று பத்திரிக்கையால் பாராட்டப்படும் திரைப்படங்களில் சில கவனிக்கப்படாமல் போவதற்கும் திரைக்கதையே காரணம் என்பது எனது தாழ்மையான கருத்து. இயக்கம், ஒளிப்பதிவை கற்றுக்கொள்வதை போல திரைக்கதையையும் ஒரு தொழில்நுட்பமாக கற்றுக்கொள்ள முடியும்.

முதலில் கதைக்கும், திரைக்கதைக்கும் உள்ள விதியாசம் என்ன? என்பதை புரிந்து கொள்வோம்.

கதை என்பது ஒரு நிகழ்வு அல்லது நடந்த சம்பவங்களின் கோர்வை எனில், திரைக்கதை என்பது அதை எவ்வாறு சுவாரஸ்யமாக கூறுகிறோம் என்பதே!..

அரிஸ்டாடில் கூற்றுப்படி ஒரு கதையில் ஓர் ஆரம்பம், அதன் வளர்ச்சி, ஓர் முடிவு இருக்கும். பிரஞ்ச் இயக்குநர் கோதார்த் கூறுவது போல் அது அதன் வரிசையிலேயே இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. இதனையே மேலை நாடுகளில் மூன்று கட்ட வடிவ அமைப்பு என்கிறார்கள்.

உண்மையில் ஒரு கதை எப்படி திரைக்கதையாக உருமாற்றம் கொள்கிறது? என்பதை பார்பதற்கு முன், கதை எங்கிருந்தெல்லாம் உருவாகிறது என்பதை பார்ப்போம், அது

1.      பிரைன் ஸ்ட்ராம் என்று சொல்லக்கூடிய கன நேரத்தில் உதயமான ஒரு யோசனையாக இருக்கலாம்.
2.      சிறுகதையையோ அல்லது புதினத்தையோ தழுவியதாக இருக்கலாம்
3.      உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டிருக்கலாம்.
4.      ஒருவருடைய (பலர்) வாழ்க்கையை அடிப்படையாக கொண்டதாக இருக்கலாம்.
5.      சொந்த கற்பனையாகவும் இருக்கலாம்.

இந்த ஐந்து முறையும் இரண்டு வகைகளுக்குள் அடங்குகிறது. அவை
  1. நேரடி திரைக்கதை ( 1,5 )
  2. தழுவல் திரைக்கதை ( 2,3,4 )

முதலில் நாம் எழுதப்போகும் திரைக்கதை நேரடி திரைக்கதையா இல்லை தழுவலா ? என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இரண்டிற்கும் திரைக்கதை அமைக்கும் முறையென்பது வேறு வேறு. பின்னர் வரும் கட்டுரைகளில் இரெண்டை பற்றியும் தனித்தனியாக பார்க்கலாம்.

நீங்கள் திரைக்கதை எழுதுவதற்கு முன், முதலில் எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள்
  1. யார் இவர்கள், எங்கிருந்து வந்தார்கள்?
  2. கதையின் பிரச்சனை என்ன?
  3. எங்கே ஆரம்பமாகிறது, எப்படி முடிகிறது?

இரண்டாவது குறிப்பு :
புதினத்தை போல் வர்ணனையாக இல்லாமல் திரைக்கதையை காட்சியாக எழுதவும். கீழ் வரும் வாக்கியம் இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை காட்டும்.

புதினம் : (சிறுகதை: துரு)
    
தற்காலிகமாக அமைதி நிலவிய அந்த இடத்தில், அவனைத் தவிர வேறு மனிதர் யாரும் அவனுடன் இல்லை. இந்த தற்காலிகமான அமைதி சட்றென்று நின்ற அடைமழை ஏற்படுத்தியதோ அல்லது வேகமாக வந்த அவனது பைக், சகதியில் தேய்த்து நிறுத்தப்பட்டதாலோ அல்லது நடக்கப்போகும் விபரீதத்தை ஒழிந்திருந்து பார்த்து கொண்டிருந்த சில்வண்டுகளாலோ திட்டமிட்டு நிகழ்த்தியது போலவே இருந்தது. அவனது முகத்தில் வன்மம் பீடித்திருந்தது. வன்மத்தின் மருந்து அவனது இடுப்பில் செருகி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியின் பிடியில் இருந்தது. வெடிச் சப்தம் நிகழப்போகும் அந்த வீட்டையே, அவன் ஆழமாக பார்த்துக் கொண்டிருந்தான். உள்ளே இருப்பவனை பற்றிய சிந்தனையில் மூழ்கிருந்தான். இன்றோடு முடியப்போகும் அவனின் கடந்த கால வாழ்வினை அசைபோட துவங்கினான்.

திரைக்கதை :

புறநகர் பகுதியில் அடர்த்தியான மரங்களுக்கு நடுவே உள்ள தனி வீடு ஒன்றை நாம் வெகுதூரத்தில் இருந்து பார்க்கிறோம். மோட்டார் பைகில் அமர்ந்து கொண்டு அந்த வீட்டையே நோட்டம் விட்டு கொண்டிருக்கும் ஒருவரை, நாம்… அவருக்கு பின்னால் இருந்து பார்க்கிறோம். விளக்கு எறிந்து கொண்டிருக்கும் ஒரு ஜன்னல் மட்டும் நம் கண்களுக்கு தெரிகிறது. இப்பொழுது அவர் முகம் நம் கண்களுக்கு தெரிகிறது, நமது பார்வை அவர் முகத்திலிருந்து அடி வயிரை நோக்கி செல்ல துப்பாக்கி ஒன்று பேன்டில் சொருகி வைக்கப்பட்டிருப்பது தெரிகிறது. மீண்டும் நம் கண்கள் வீட்டின் ஜன்னல் பக்கம் செல்ல எறிந்து கொண்டிருந்த விளக்கு அனைக்கப்படுகிறது. அவர் பைக்கிலிருந்து இறங்கி, கையில் துப்பாக்கியை பிடித்து கொண்டு வீட்டின் மாடிப்படி நோக்கி ஓட அதை நாம் தூரதில் இருந்து பார்க்கிறோம். அமைதியாக சில்வண்டு சப்தம் கூட இல்லாமல் அந்த வீடு நமக்கு முழுவதுமாக காட்டப்படுகிறது. சிறிது நேர அமைதிக்கு பிறகு துப்பாக்கி வேடிக்கும் சப்தம் கேட்க அந்த காட்சியின் மீது டைட்டில் துவங்குகிறது.

இதில் மேலே உள்ள புதினத்திற்கும் கீழே உள்ள திரைக்கதைக்கும் உள்ள வித்தியாசத்தை படிக்கும் போது நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். கீழே உள்ள திரைக்கதையில் ஒவ்வொறு வரியும் ஒவ்வொறு காட்சி. திரைக்கதையினை இதேபோல் காட்சியாக தான் எழுத வேண்டும். இது திரைக்கதை எழுதுவதற்கான முழுமையான தொழில்நுட்ப முறை இல்லை என்றபோதிலும் அடுத்தடுத்து வரும் கட்டுரைகளில் தொழில்நுட்ப திரைக்கதை எழுதும் முறை பற்றி பார்க்கலாம்.

மூன்றாவது குறிப்பு : லொகேஷன்
                   
                     உண்மையில் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் எங்கு வேண்டுமானாலும் நிகழலாம், ஆனால் !, திரைப்படத்தில் அவ்வாறு நடைபெறுவதில்லை. நடைபெறுவது அவ்வளவு உணர்வு பூர்வமாகவும் இருக்காது. “சில்லுனு ஒரு காதல்” திரைப்படத்தில் ஜோதிகா தன் கணவனின் நாட்குறிப்பை வாசிக்கும் காட்சி இரவினில் படமாக்கப்பட்டிருக்கும். சேரனின் “பொக்கிஷம்” திரைப்படத்தில் இதே போன்ற ஒரு காட்சி பகலில் படமாக்கப்பட்டிருக்கும். சேரன் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இயக்குநர் என்பதில் எந்த சந்தேகமுமில்லை, இருப்பினும் நாட்குறிப்பு என்பது ஒருவருடைய அந்தரங்கமாகும், அது கணவன், தந்தை யாருடையதாக இருந்தாலும் சரி மனைவி, மகன் யார் வாசித்தாலும் சரி, ஒருவருடைய அந்தரங்க வாழ்க்கையினை திருட்டுத்தனமாக அனுகுவதற்கு அல்லது அலசுவதற்கு சமம். இதில் இரவு, திருட்டு என்பதற்கு குறியீடாக பயன்படுத்தப்பட்டுள்ளது. சில்லுனு ஒரு காதலில் உள்ள அந்த காட்சி கொடுத்த பாதிப்பு, சேரனின் “பொக்கிஷம்” திரைப்படம் எற்படுத்தாமல் போனதற்கு இது ஒரு முக்கிய காரணம். ஆர்சன் வெல்சின் “சிட்டிசன் கேன்” ஒரு பெரிய செல்வந்தரின் அந்தரங்க வாழ்வினை விவரிக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தின் முதல் ஷாட்டில் யாரும் வரம்பு மீறி உள்ளே வராதே(No trespassing) என்ற அறிவிப்பு பலகையின் அறிவிப்பை மீறி நம் கண்கள் வீட்டினுள் அத்துமீறி செல்லுவதாக காட்சி அமைக்கப் பட்டிருக்கும். இது ஒரு சிறந்த குறியீட்டிற்கு எடுத்துக்காட்டு.

இந்த மூன்று குறிப்புகளையும் மனதில் நிலைநிறுத்திக்கொண்டு எழுதத் துவங்குவது மிகவும் முக்கியமானதாகும். இதை சுருக்கமாக என்ன சொல்வது, எப்படி சொல்வது, எங்கே சொல்வது என நினைவில் வைத்துக்கொள்வோம். செயல்களில் (Action) அதிக கவனம் செலுத்துவது கதையில் கோட்டை விட செய்யும். கதாபாத்திரங்களில் அதிக கவனம் செலுத்துவது திரைக்கதையை மந்தமானதாக்கும். தெளிவான வரையறுக்கப்பட்ட செயலை யதார்த்தமான, சிக்கலான கதாபாத்திரங்கள் கொண்டு வடிவமைக்கும் போது ஆகச்சிறந்த திரைக்கதையை நாம் பெறலாம்.

இறுதியாக ஒன்றை எப்பொழுதும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள், நல்ல சிந்தனைகள் மிகவும் சிறந்த சிந்தனைகளால் கொலை செய்யப்படுகிறது.  
                                          
                                                தொடரும்…..



Comments

Post a Comment