துப்பாக்கியில் இருந்து வெடித்த மலர்கள்




அமெரிக்கர்களும், அமெரிக்கர்கள் அல்லாதவர்களும் என்னை ஒரு முரட்டு ஆசாமியாக நினைவிலிருத்திக் கொள்கின்றனர். அவர்கள் மீது குற்றம் ஒன்றுமில்லை, நான் ஆரம்பகாலகட்டத்தில் அப்படியான திரைப்படங்களை தான் செய்துகொண்டிருந்தேன். ஆனால் சிலராவது எனது பிற திரைப்படங்கள் மூலமாக என்னை அடையாளம் கண்டுகொள்ளட்டும் என்றே நான் விரும்புகிறேன். எவற்றை நான் மாற்றம் நிகழ்த்த முனைந்ததாக கருதுகிறேனோ அவற்றை குறிப்பிடுகின்றேன்.

                                                                                                                       --- கிளின்ட் ஈஸ்ட்வுட்
70களில் ஆங்கில படங்களுக்கு சென்றவர்கள் அதிஷ்டஷாலிகள், அவர்களின் விழிகள் அந்த இளைஞனின் துப்பாக்கிகளை நேருக்கு நேர் எதிர்கொண்டு ருந்திருக்கும். அவர்களுக்கு மட்டுமே தெரியும் துப்பாக்கிகளிலிருந்து வன்முறை வெடிக்காது சப்தங்கள் மட்டுமே வெடித்து கிளர்ச்சியுர செய்யுமென்று, ஒருவேளை இந்த கட்டுரையை இயக்குனர் ராம் எழுதி இருந்தால் இவ்வாறுதான் இருந்திருக்கும்..

கிளின்ட் ஈஸ்ட்வுட் எப்பொழுதுமே ஒரு வசூல் மன்னன். காமிராவிற்கு முன் வேலை செய்த போதும் சரி பின்னால் இருந்த போதும் சரி, அவரது படங்கள் வசூல் மழை பொழிந்த வண்ணமே இருந்தன. தொடர்ந்து பதினைந்து வருடங்கள் நடித்தது அழுப்பு தட்டியது என்று தோன்றியதோ தெரியவில்லை, 1971ம் ஆண்டு ப்ளே மிஸ்டி ஃபார் மீ என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநர் நாற்காலியில் அமர்ந்தார். புதுவேலையில் புதுவிதமான கவர்ச்சியை உணர்ந்த ஈஸ்ட்வுட், வெறிகொண்டு பல படங்களை இயக்கிய வண்ணமிருந்தார். அடுத்த இருபது வருடங்கள் திரைப்படம் இயக்குவதில் மூழ்கிப்போயிருந்த அவர், வெஸ்டர்ன் என்று சொல்லப்படும் கௌபாய் திரைப்படங்களையும், அதிரடி திரைப்படங்களையும் மலிவான ரீதியில் இயக்கிய வண்ணமிருந்தார். ஹை பிளேன்ஸ் டிரிப்டர் (1973), சடன் இம்பாக்ட் (1983), போன்ற திரைப்படங்கள் அதில் முக்கியமானவை. ஆனால் தான் வரலாற்றில் மிக முக்கிய ஆளுமை கொண்ட இயக்குநர் என்பதை உணர அவருக்கு இருபத்தியோரு வருடங்கள் காவு கொடுக்க வேண்டியிருந்தது.

ஆம் 1992ம் ஆண்டு வெளிவந்த அன்ஃபர்கிவன்(unforgiven) என்னும் திரைப்படம் நம்மளை வியப்பில் ஆழ்த்தியது மட்டுமல்லாது அவர் ஆழ் மனதில் தூங்கிகொண்டிருந்த மேதமையை நம் முன் நிறுத்தியது. அதுவரை துப்பாக்கியை மட்டுமே பிடித்துக்கொண்டிருந்த ஈஸ்ட்வுடின் கைகள் முதல் முறையாக விருதுகளை பிடித்தன. அன்று முதல் இன்று வரை அவர் ஒரு மிகச்சிறந்த இயக்குநராகவே அறியப்படுகிறார்.
A Perfect world (1993), 
Space cowboy (2000), 
Mystic River (2003), 
Million dollar baby (2004)
A letter to lwo jima / Flags of our fathers (2006), 
Changeling (2008), 
Here after (2010)
இவை எல்லாம் யாரால் மறக்கமுடியும்.
இயக்குநர் கிளின்ட் ஈஸ்ட்வுடின் ஆளுமையை அன்ஃபர்கிவனுக்கு முன், அன்ஃபர்கிவனுக்கு பின் என இரண்டு காலகட்டங்களாக பிரித்துகொள்ளலாம்.

50களில் மத்தியில் மூன்று வெஸ்டர்ன் திரைப்படங்கள் உட்பட பல படங்களின் கால் ஷீட்டில் தன் பெயர் இடம்பெரும் வகையில் தன் திரையுலக வாழ்கையை ஆரம்பித்த ஈஸ்ட்வுடின் திரைவாழ்வில், ரௌடி யேட்ஸ் என்னும் பாத்திரம்(ரா ஹைட் தொலைக்காட்சி தொடர்) அவருக்கு முக்கிய திருப்புமுனையை எற்படுத்திக் கொடுத்தது. 1959ம் ஆண்டு ஜனவரியிலிருந்து 1966ம் ஆண்டு ஜனவரிவரை வந்த அந்த தொடர்தான் பின்னாளில் செர்ஜியோ லியோனியுடனான நட்பிற்கும் பாலமாக அமைந்தது. ரா ஹைடை செர்ஜியோ இயக்காத போதிலும் ஃபிஸ்ட் ஃபுல் ஆஃப் டாலர்ஸ்(1964) திரைப்படத்திற்கான நடிகர் தேர்வுக்கான வேட்டையில் தாகத்துடன் பாலைவனத்தில் அலையும் கௌபாயை போல் சோர்ந்திருந்தார். ஒரு முஷ்டி அளவே டாலர்களை வைத்திருந்த செர்ஜியோவால் ஒரு பெரிய நடிகரை ஃபிஸ்ட் ஃபுல் ஆஃப் டாலர்ஸில் அமர்த்த முடியவில்லை. ஒரு டஜன் நடிகர்களின் நிராகரிப்பிற்க்கு பிறகு இறுதுயாக கன் ஃபைட் அட் ரெட் சாண்ட்(Gun fight at red sand) திரைப்படத்தில் நடித்த ரிச்சர்ட் ஹேரிசனை சந்தித்தார், ஆனால் ஹேரிசனுக்கும் திரைக்கதை மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக இல்லை, அவர் ரா ஹைடில் நடித்துக்கொண்டிருந்த ஒரு இளைஞனிடம் செர்ஜியோவை அறிமுகம் செய்து வைத்தார். வட்ட வடிவ தொப்பியுடன் வந்து நின்ற ரௌடி யேட்ஸ் என்னும் அந்த இளைஞனும், அவனது தொப்பியும் டாலர்ஸ் முப்பாகத்தின் பெயரில்லா நாயகனின் அடையாளமாகின.

டாலர்ஸ் முப்பாகம்

A fist full of dollars, For a few dollars more (1965), மற்றும் The good, the bad and the ugly (1966) என்ற இந்த மூன்று திரைப்படங்களையும் செர்ஜியோவின் dollars trilogy/The Man with no name trilogy என்று மேற்க்கத்தியர்கள் அழைக்கிறார்கள். உண்மையில் ஸ்பகாட்டி வெஸ்டர்ன் என்று அழைக்கப்படும் இத்தாலிய வெஸ்டர்ன் இந்த Dollars trilogyக்கு பிறகே பிரபலமானது. இதை தொடர்ந்து ஆயிரமாயிரம் ஸ்பகாட்டி வெஸ்டர்ன் திரைப்படங்கள் உறுவாக செர்ஜியோ காரணமாக இருந்தார். 

செர்ஜியோவுடன் இணைந்து கொண்டு ஐரோப்பவிலும், டான் சீகலுடன் இணைந்து கொண்டு அமெரிக்காவிலும் வசூல் வேட்டையாடினார் ஈஸ்ட்வுட். Dirty Harry (1971) என்னும் போக்கிரியை உருவாக்கிய டான் சீகலையும், செர்ஜியோ லியோனியையும் தவிர்த்துவிட்டு கிளின்ட் ஈஸ்ட்வுடின் வாழ்வை பதிவு செய்வது என்பது மிகவும் அபத்தமானதாக இருக்கும். இவ்விருவரின் பாதிப்பும் அவர் இயக்கிய ஆரம்ப கால திரைப்படங்களில் பிரதிபலித்தன. மேலும் ஈஸ்ட்வுட்டை ஒரு பெரிய நடிகனாக்கிய பொறுப்பும் இவர்களையே சாரும். ஆனால் இவர்கள் ஈஸ்ட்வுடின் வாழ்வினில் அறிமுகம் ஆவதற்கு முன்பே அவருக்கு திரைப்படம் இயக்க வேண்டும் என்ற எண்ணமிருந்தது. 

ரா ஹைடில் நடிக்கும் போதே தன்னுடைய எண்ணத்தை தயாரிப்பாளர்களிடம் தெரிவித்தார். தான் சில அதிரடி காட்சிகளை முன்நின்று இயக்க விரும்புவதாக கேட்டுக்கொண்டவர், அவை மற்ற தொலைக்காட்சி தொடர்களை போல் இல்லாமல் இருக்க வேண்டும் எனவும் உறுதியாயிருந்தார். அவரின் திறமையை அறிந்த ரா ஹைடின் தயாரிப்பாளர்கள் அடுத்துவரவிருக்கும் தொடர்களுக்கான டிரைலரை இயக்கும் பொறுப்பினை ஈஸ்ட்வுட்டிடம் கொடுத்தனர். ஃபிஸ்ட் ஃபுல் ஆஃப் டாலர்ஸ் எடுக்கும்போது செர்ஜியோவிடன் திரைக்கதையில் இருக்கும் ஒரு ஃபிளாஷ் பேக்கை தவிற்கும்படி கேட்டுக்கொண்டார். அதில் அவனது கடந்தகாலம் பற்றியும் அவன் ஏன் பலிவாங்க அலைகிறான் என்பது பற்றியும் விவரணையாக இருந்தது. அதனை கைவிடும் படி கேட்டுக்கொண்ட ஈஸ்ட்வுட், அதற்கு கூறிய காரணம் ஐரோப்பியர்கள் அவனது கடந்த காலம் பற்றிய (தங்களுக்குள்ளாகவே கற்பையானதொரு) புரிதலில் இருப்பார்கள். அது அக்கதாபாத்திரத்தினை செம்மையானதாக மாற்றும் என்று நம்பினார். ரோகோவின் பிடியிலிருந்து ஒரு இளம் தாயை விடுவிக்கும் போது, அவளிடம் பதிலளிக்கும் விதத்தில் முன்பு ஒரு காலத்தில் உதவிக்கு ஆளில்லாமல் உங்களை போல் தவித்த ஒரு பெண்ணை எனக்கு தெரியும் என்று ஒரு காட்சி முடிவுரும். அதுபோதும், அவனது கடந்த காலம் பற்றி நாம் புரிந்துகொள்ள என்று நம்பினார். 

Dollars trilogy யின் முதல் பாகமான Fist full of dollarsல் ஹென்றி ஃபோண்டாவும், சார்லஸ் ப்ரான்சனும் நிராகரித்த பாத்திரத்தை தான் ஈஸ்ட்வுட் ஏற்றிருந்தார். ஹென்றி ஃபோண்டாவும், சார்லஸ் ப்ரான்சனும், ரிச்சர்ட் ஹேரிசனும் Fist full of dollarsஐ நிராகரித்தற்கு கூறிய காரணம் திரைக்கதை வழுவானதாக கட்டமைக்கபடவில்லை என்பதே.

ஆனால் Fist full of dollars திரைக்கதை அகிரா குரோசாவின் yojimbo (1961) வை தழுவி எடுக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அதனை உண்மை என நிரூபிக்க குரோசாவா முயற்சி செய்தார். குரோசாவ கோர்ட் படி ஏறாமலிருக்க 15% விநியோக உரிமையும், 1 லட்சம் அமெரிக்க டாலர்களும் கொடுத்து அவரை சமரசம் செய்தனர். ஆனால் உண்மையில் 1929ம் வருடம் டாஷியல் ஹெம்மட்(Dashiell hammert) எழுதிய ரெட் ஹார்வெஸ்ட்(Red harvest) என்னும் புதினம் இந்த இரு மேதைகளின் படைப்பையும் ஒத்துப்போகிறது. ஒரு வேலை ரெட் ஹார்வெஸ்ட் குரோசாவவை பாதித்து இருக்கலாம். மேலும் ஜான் ஃபோர்ட், ஹோவர்ட் ஹாக்ஸ் போன்ற ஹாலிவுட் இயக்குநர்களின் பாதிப்பும் yojimboவில் காணப்பட்டது. உலக இயக்குநர்களின் ஆசானான ஜப்பானிய மேதையை சங்கடத்தில் ஆழ்த்தாமலிருக்கவே, சமரச முயற்சியை இத்தாலிய மேதை மேற்கொண்டிருப்பார் என்றே தோன்றுகிறது. Fist full of dollars நம் தமிழ் திரைப்படங்களை போலவே பின் ஒலிப்பதிவு (டப்பிங்) செய்யப்பட்ட திரைப்படமாகும். ஹாலிவுட் திரைப்படங்களை போல் நேரடி ஒலிப்பதிவு (live sound) செய்யாப்படாமல் அன்றைய தேதிகளில் எடுக்கப்பட்ட பெரும்பாலான இத்தாலிய திரைப்படங்களை போலவே இதுவும் பின் ஒலிப்பதிவையே மேற்க்கொண்டன.

இரண்டாவது வேட்டை
ஐரோப்பவிற்கு சென்று பார்த்தாலின்றி கேபில்கள் மூலமாகவோ, வீடியோ காசட்கள் மூலமாகவோ, இணையம் மூலமாகவோ பிற நாட்டின் திரைப்படங்களை பார்க்க முடியாத அக்காலகட்டத்திலேயே ஃபிஸ்ட் ஃபுல் ஆஃப் டாலர்ஸ் பற்றி அமெரிக்காவின் யுவன், யுவதிகளின் மத்தியில் டாக் ஆஃப் தி டவுனாக இருந்தது. இத்திரைப்படம் அமெரிக்காவில் வெளிவருவதற்கு முன்பு (இத்தாலி பதிப்பு மட்டும்) திரைப்படத்தை பார்த்த அமெரிக்க சினிமா காதலர்கள் பத்திரிக்கைகளிலும், வானொலியிலும், தொலைக்காட்சியிலும் பேசியவண்ணமே இருந்தனர். 

உண்மையில் டாலர்ஸ் முப்பாகம் ஒரு திட்டமிட்ட முப்பாகம் இல்லை. முதல் திரைப்படமான ஃபிஸ்ட் ஃபுல் ஆஃப் டாலர்ஸ் எடுக்கும் போது செர்ஜியோவிற்கு இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்ற எண்ணமோ அல்லது ஏற்கனவே எழுதி முடிக்கப்பட்ட திரைக்கதையோ இல்லை. மேலும் அவர் ஃபார் தி ஃபியூ டாலர்ஸ் மோர் திரைப்படத்தை இரண்டாம் பாகமாக தொடரவில்லை, இருந்தும் மூன்று படத்திலும் தொடரும் ஈஸ்ட்வுடின் (பெயரில்லா) கதாபாத்திரத்தின் தனித்தன்மையில் இருக்கும் ஒற்றுமையை வைத்து திரைப்பட விமர்சகர்கள் இம்மூன்று திரைப்படத்தையும் சேர்த்து டாலர்ஸ் முப்பாகம் என்று முன்மொழிந்தார்கள்.

ஃபிஸ்ட் ஃபுல் ஆஃப் டாலர்ஸின் வெற்றியை தொடர்ந்து செர்ஜியோவிற்கு மேலும் ஒரு ஸ்பகாட்டி வெஸ்டர்ன் இயக்க வேண்டும் என்ற எண்ணமிருந்தது. அதை தன் தயாரிப்பாளர் க்ரிமால்டியிடம் தெரிவித்தார். க்ரிமால்டி முதல் பாகத்தை தயாரிக்காத போதிலும் அவருக்கு இதில் அதீத அளவு நம்பிக்கையிருந்தது. காரணம் ஃபிஸ்ட் ஃபுல் ஆஃப் டாலர்ஸ் அமெரிக்காவில் திரையிடப்பட்ட போது 3.5 மில்லியன் டாலர்களை வசூல் செய்திருந்தது. அன்றைய தேதியில் ஒரு ஸ்டூடியோ தயாரிக்கும் திரைப்படத்தின் வசூல் இரண்டு, மூன்று மில்லியங்களை கடந்து செல்வது என்பது மிகவும் ஆரோக்கியமான வசூலாகவே பட்டது. மேலும் எந்த ஒரு வேற்றுமொழி திரைப்படமும் இந்தளவிற்கு வசூல் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் தனக்கு ஹாலிவுட்டில் நுழைவு வாயிலாக இருக்கும் என க்ரிமால்டி நம்பினார். மேலும் அவர் செர்ஜியோவின் திறமை மீதும், ஈஸ்ட்வுடின் திறமை மீதும் அபார நம்பிக்கை கொண்டிருந்தார். இவ்விருவரின் விறுப்பமும் ஈஸ்ட்வுட்டை இரண்டாம் பாகத்தில் இடம்பெறச்செய்ய வேண்டும் என்பதே. 

செர்ஜியோ போன்ற இயக்குநருடன் பணியாற்ற யாருக்கு தான் விருப்பம் இருக்காது, அதுவும் ஃபிஸ்ட் ஃபுல் ஆஃப் டாலர்ஸை பார்த்த பிறகு. மீண்டும் ஈஸ்ட்வுட் ஃபார் தி ஃபியூ டாலஸ் மோர், தி குட், தி பேட், அன்ட் தி அஹ்லிக்கு பிறகு ஒன்ஸ் அப்பான் ஏ டைம் இன் தி வெஸ்டில் செர்ஜியோவின் அழைப்பை ஏற்க மறுத்தார். தன் வாழ்க்கை இத்தாலியிலேயே முடிவடைவதை ஈஸ்ட்வுட் விரும்பவில்லை. தன் நீண்ட கால நண்பனான டெட் போஸ்ட்டுடன் இணைந்து கொண்டு ஹேங்க் தெம் ஹை மூலம் நேரடி அமெரிக்க திரைப்படத்தில் அறிமுகமானார். டெட் போஸ்ட் பிற்காலத்தில் மெக்னம் ஃபோர்ஸை இயக்கினார். 

டாலர்ஸ் முப்பாகத்திற்கு பிறகே எதிர் நாயகத்துவம் பிரபலமடைந்தது அல்லது அதனை கிளின்ட் ஈஸ்ட்வுட் பிரபலபடுத்தினார் என்றும் கூறலாம். அவரது டர்டி ஹாரி கதாபாத்திரமும், டாலர்ஸ் முப்பாகத்தின் பெயரில்லா நாயகனும் எதிர் நாயகர்களே. அதுவரை மக்கள் பார்த்துக்கொண்டிருந்த மிக நல்லவன் X மிக கெட்டவன் என்று கதை சொல்லும் முறை அன்று முதல் கேலியாகிபோனது. ஈஸ்ட்வுட் சந்தேகமின்றி ஒரு கேளிக்கையாளர், ஆனால் அவரது திரைப்படங்கள் ஆஸ்காருக்கு தகுதியானவை என்று அகாடெமி ஒரு போதும் நினைத்ததில்லை.

கடந்த மூன்று தசாப்தங்களாக  மக்கள் மனதையும், விமர்சகர்களின் பாராட்டுகளையும் ஒருசேரப்பெற்றிருந்த அவரை ஒரு சிறந்த இயக்குநர் என்று அகாடெமியால் ஏற்று கொள்ள முடியவில்லை. அவர் 1992ம் ஆண்டுவரை ஐம்பத்தி ஒன்று திரைப்படங்களில் நடித்திருந்தார் மற்றும் தொடர்ந்து அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தை தக்கவைத்திருந்தார். அமெரிக்காவின் மிகவும் மரியாதைக்குரிய இயக்குநர்களில் ஒருவர் என்று பரவலான விமர்சன பாராட்டு பெற்றிருந்தார்.  உயரிய விருதின் மூலம் வரலாற்றில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என முனைப்புடன் இருந்தார். அன்ஃபர்கிவனின் (1992), ஆஸ்கார் மூலம் அது உறுதிப்படுத்தப்பட்டது. அன்ஃபார்கிவனிற்காக சிறந்த இயக்குநர், சிறந்த திரைப்படம் என அவருக்கு இரெண்டு ஆஸ்கர்(அகாடெமி) விருதுகள் வழங்கப்பட்டது.

அன்ஃபர்கிவன்
ஒரு திரைக்கதையை படித்தவுடன் படமாக்குவதும், சில திரைக்கதைகளை கிடப்பில் போடுவதும் அவரது ஆளுமையின் முக்கிய வெளிப்பாடுகளில் ஒன்று. எதை, எப்பொழுது படமாக்க வேண்டும் என்பதில், அவர் ஒரு தேர்ந்த கலைஞன். Unforgiven திரைக்கதையை 1980ம் ஆண்டு படித்துவிட்டு அதற்கான உரிமையை வாங்கியிருந்தார். அடுத்த பத்து வருடங்கள் அதை கிடப்பில் போட்டிருந்தார். 80களில் unforgivenஐ இயக்கும் அளவிற்கு தான் இன்னமும் பக்குவ படவில்லை என்று முடிவெடுத்திருந்தார். 

அது எவ்வளவு பெரிய அற்புதமான முடிவு. நம்மில் எத்தனை பேர் அப்படி ஒப்புக்கொள்வோம். உண்மையை நாம் நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தால் அதன் முதுகில் நம் கத்தி செருகப்பட்டிருக்கும். ஆனால் உண்மை, நம்மிடம் சுந்தர பாண்டியன் சசிகுமார் போல் நடந்து கொள்ளப்போவதில்லை என்பதும் நமக்கு நன்கு தெரியும், இருப்பினும் உண்மையை நாம் ஒரு போதும் நேர்மையாக அனுகுவதில்லை. 

இவரது படங்கள் பெரும்பாலும் உண்மைக்கும், கற்பனைக்கும் இடையேயான இடைவெளியை ஆராய்கிறது. பெரும்பாலும் இவரது முதன்மை கதாபத்திரங்கள் (ஆண்கள்) தாங்கள் கடந்த காலத்தில் செய்த தவறுக்காக பிராயச்சித்தம் தேடுபவர்களாகவே சித்தரிக்கப் படுகிறார்கள்.
எப்பொழுதும் குறைந்த டேக் கொண்டதாக இருக்கும் இவரது படப்பிடிப்பு தளம் குறைந்த நாட்களிலேயே முடிவடையவும் செய்கிறது. மிஸ்டிக் ரிவரில் நடித்த டிம் ராபின்ஸ், ஈஸ்ட்வுட்டின் படப்பிடிப்பு தளம் பற்றி குறிப்பிடும் பொழுது ஒரு நாள் கூட படப்பிடிப்பு காலை 9 மணிக்கு முன் ஆரம்பிக்கபடவில்லை ஆனால் பெரும்பாலும் மதிய உணவிற்கு பின் நான் படப்பிடிப்பு தளத்திலிருந்து கிளம்பும் படியாகவே இருந்தது.

செப்பனிடுதல் என்பதை அவருக்கு வேதவாக்கு. ஒரு திரைக்கதையை shooting script ஆக்குவதற்கு முன்னும் சரி, பின்னும் சரி கதையின் மையப்போக்கை தவிர்த்து மற்ற சிறு சிறு விவரங்களையும், சில சில மாற்றங்களையும், திரைக்கதையில் புகுத்திய வண்ணமிருப்பார்.

நான் எப்பொழுதும் பார்வையாளர்களை என் மனதில் நிலைநிருத்திக் கொள்கிறேன். பார்வையாளனுக்கு ஒரு கதையை சொல்லும் போது அதனை எவ்வளவு சுவாரஸ்யமாக சொல்ல முயற்சிக்கிறோம் என்பது தான் முக்கியம்.
                                                                                                                           
                                                                   -- கிளின்ட் ஈஸ்ட்வுட்

இறுதியாக இளம் இயக்குநர்களுக்கு அவர் அறிவுரை என்று ஒன்றையும் கூறவில்லை மாறாக ஒரு கருத்தினை முன் வைக்கிறார், நீங்கள் இதுவரை வாழ்வில் கற்ற அனைத்தையும் உங்கள் திரைப்படத்தில் வையுங்கள், அதில் உங்களுக்கு தெரிந்த மாந்தர்கள் அனைவரை பற்றியும் பேசுங்கள், மேலும் பார்வையாளர்களை பற்றி பேசும் போது மக்கள் நம்மீது அதிக அளவு அக்கறையுள்ளவர்கள் அவர்கள் நாம் தோற்றுவிடக்கூடாது என்று நம்முடைய புதுமையை (புதிய முயற்சி) பரிசீலிக்கச்சொல்வார்கள், அதை பரிசீலிக்கலாம இல்லை வேண்டாமா என்று நாம் தான் நம் புதுமையின் வீரியத்தை பொறுத்து முடிவெடுக்க வேண்டும் என்கிறார் அவர். 

ஈஸ்ட்வுட்டை சிறந்த நடிகர் என்பதைவிட சிறந்த இயக்குநர் என்றே உலகம் அடையாளப்படுத்திக்கொள்கிறது. ஒரு வேளை திரைப்படம் இயக்குவதில் அவரிடம் இருந்த அதீத திறமை நடிகர் ஈஸ்ட்வுடை இருட்டடிப்பு செய்திருக்கலாம். இந்த உலகில் இது ஏற்றுக்கொள்ளப்பட சாத்தியமே இல்லை என்பது இருப்பது போல், ஏன் இது சாத்தியமாகாது என்று முழுமனதாக நம்மக்கூடியவர். அதனால் தான் 82 வயதை கடந்தும் அவரது படைப்பின் மூலம் இன்றளவும் நமக்கு இளமையாக காட்சியளிக்கிறான் இந்த சான் ஃப்ரான்ஸிஷ்கோகாரன்.   



Comments